மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது


தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது என்று கூடலூரில் ராகுல்காந்தி பேசினார்.

நீலகிரி

கூடலூர்

மக்களிடையே பா.ஜனதா வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது என்று கூடலூரில் ராகுல்காந்தி பேசினார்.

ராகுல்காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோதா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயண பாதயாத்திரையை கடந்த 7-ந் தேதி தொடங்கினார். தொடர்ந்து கேரள மாநிலத்தில் பாதயாத்திரை செய்த அவர், 23-வது நாளான நேற்று காலை 11 மணிக்கு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்தை வந்தடைந்தார்.

அப்போது அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

குறைகளை கேட்டார்

பின்னர் பகல் 3 மணிக்கு அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள், தேயிலை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார். இதேபோல் கூடலூர் பகுதியில் நிலவும் நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கட்சியினர் மனுக்கள் அளித்தனர். மாலை 4.30 மணிக்கு கோழிப்பாலம் அரசு கல்லூரி வளாகத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.

அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க தேசியக் கொடியை ஏந்தியவாறு கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடி ஏந்தியவாறு சென்றனர். அங்கிருந்து கோழிப்பாலம் கடை வீதி, பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டிபேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 5 முனை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ராகுல்காந்தி வந்தடைந்தார். அப்போது வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்றபடி ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒன்றாக இருக்கிறது

3 மொழிகள், 3 கலாசாரங்களை இணைக்கும் இடமாக கூடலூர் உள்ளது. இது அழகாக இருப்பதற்கு காரணம் மலைகளும், இங்கு இருக்கும் சூழ்நிலைகளும்தான். இது அழகாக இருப்பதற்கு 3 மாநிலங்களின் பண்பாடு, 3 மொழிகள், 3 கலாசாரங்களும்தான் காரணம். இங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என 3 மொழிகளும் ஒன்றாக இணைந்து இருக்கிறது.

இந்த இடம் 3 மொழிகளையும் மதிக்கப்படும் இடமாக இருக்கிறது. வெவ்வேறு மதங்களின் அடிப்படை தன்மையையும், அதன் முறையையும், அடுத்த மதங்கள் இங்கு ஆதரிப்பதுடன் வரவேற்கின்றன. இங்கு எல்லோரும் பாசத்தோடு நடத்தப்படுகிறார்கள். இந்த யாத்திரை எந்த கொள்கைக்காக நடத்தப்படுகிறதோ அந்த கொள்கை அனைத்தும் இந்த இடத்தில் இருக்கிறது.

கவர்னர்களின் தலையீடு

நாங்கள் இங்கே ஒற்றுமை பற்றியும், ஒன்றாக சேர்ந்து வாழ்வதை இங்கு கொண்டு வரவில்லை. அதற்கு மாறாக எப்படி ஒன்றாக இருக்க வேண்டும். எப்படி இணைந்து வாழ வேண்டும் என்பதை உங்களிடத்தில் இருந்து பிற மக்களுக்கு எடுத்துச்செல்கின்றோம். இதுதான் இந்தியாவின் திட்டம்.

எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்களின் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. இவர்களை மக்கள் அமரவைக்கவில்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாதான் அமர வைத்து அவர்களை இயக்கி வருகிறார்கள். மேலும் மக்களால் ேதர்வு செய்யப்பட்ட அரசை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை சேர்ந்து கவிழ்த்து வருகிறது. அதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?.

வெறுப்பு அரசியல்

இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மீதும் ஒரே மொழியையும், ஒரே பண்பாட்டையும் பா.ஜனதா திணித்து வருகிறது. எங்களுக்கு அனைத்தும் இணைந்துதான் இருக்க வேண்டும என்பதுதான். இங்கே எல்லோரும் ஒன்றாக, சமமாக இருக்க வேண்டும் என்பதை பா.ஜனதா விரும்பவில்லை.

இன்றைக்கு நாட்டில் இருக்கும் நிலையை கவனித்தால், பா.ஜனதா பரப்பி வரும் வெறுப்பு தன்மை மற்றும் கசப்பு தன்மையால் மக்களிடம் வெறுப்பு தான் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே வெறுப்பு அரசியலைதான் பா.ஜனதா பரப்பி வருகிறது. தற்போது இந்தியா வேலையில்லாத திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து இருக்கிறது.

ஒரே பொருளுக்கு 2 விதமான ஜி.எஸ்.டி.

சிறிய தொழிற்சாலைகள், விவசாயிகள் என எல்லோரும் மிக மிக கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்று நான் சிறு தொழில் செய்து வருபவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை சந்தித்தேன்.

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள ஜி.எஸ்.டி. உங்களுக்கு உதவுகிறதா அல்லது பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஒவ்வொருவரும் பேரழிவை ஏற்படுத்துகிறது என்று கூறினார்கள். சிலர் ஒரே பொருளுக்கு 2 விதமான ஜி.எஸ்.டி. உள்ளது என்றனர்.

ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றை கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம், உங்கள் பணத்தை உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுப்பதற்காகத்தான்.

ஏற்றுக்கொள்ள மாட்டோம்

நாங்கள் ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர் கொடுத்தோம். இப்போது அதன் விலை ரூ.1100-க்கும் மேல் சென்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலை மிகவும் உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் தவறான முறையை பா.ஜனதா கடைபிடித்து உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மற்றவர்களுக்கு தவறான முறையில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் இதுபோன்ற ஒரு ஏற்றத்தாழ்வு கொண்ட இந்தியாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதுபோன்று பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காதான் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. நான் இந்த பகுதியில் உள்ள தெருக்களில் நடப்பதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த இடத்தில் சுற்றுலாவை மிகப்பெரிய விஸ்தரிப்பை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேச அதை ஜெயக்குமார் எம்.பி. தமிழில் மொழிபெயர்த்தார்.

இதில் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இன்று கர்நாடகா செல்கிறார்

இதையடுத்து கூடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள கேரவன் வேனுக்கு சென்று இரவு தங்கினார். தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு முதுமலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சென்று பாதயாத்திரையை தொடர்கிறார். முன்னதாக ராகுல் காந்தி பாதயாத்திரையையொட்டி கூடலூர் நகரில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story