கடமை தவறுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுப்பது பா.ஜ.க. தான்


கடமை தவறுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுப்பது பா.ஜ.க. தான்
x

கடமை தவறுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு முதல் குரல் கொடுப்பது பாரதீய ஜனதா கட்சி மட்டும் தான் என்று தெற்கு மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி பேசினார்.

திருவண்ணாமலை

கடமை தவறுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு முதல் குரல் கொடுப்பது பாரதீய ஜனதா கட்சி மட்டும் தான் என்று தெற்கு மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி பேசினார்.

அறிமுக கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் இன்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி ஏற்புரையாற்றினார். மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொது செயலாளருமான பி.கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தூங்க கூடாது

புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நிகழ்ச்சி ஒன்றில் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வில் 30 ஆண்டுகள், 20 ஆண்டுகள் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த தேச பணிக்காக தன்னை முழுமையான அர்ப்பணித்து கொண்டிருப்பவர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் கொண்டு செல்வதற்காக இந்த பொறுப்பை எடுத்து உள்ளேன் என்று தெரிவித்தார்.

அதேபோல் மாவட்ட, மாநில நிர்வாகிகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை யாரும் தூங்க கூடாது.

உங்களுடைய முழு கவனமும் கிளை பூத் அமைப்பது, சக்தி கேந்திரத்தை வலுப்படுத்துவது, மண்டலங்களை முழுமையான மண்டலங்களாக மாற்றுவது என்பதில் முழுமையாக செயல்பட வேண்டும். எதிரிகளை எதிர்கின்ற, சவால்களை சமாளிக்கின்ற ஒவ்வொரு காரிய கர்த்தாக்களையும் போர் தளபதியாக மாற்ற வேண்டியது தான் உங்களின் தலையாய கடமை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

முதல் குரல்

அதனால் மற்றவர்களை காட்டிலும் செம்மையான, திறம்பட நீங்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு எப்பொழுது எல்லாம் அநீதி நடக்கிறதோ, மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் தன்னுடைய கடமையில் இருந்து தவறுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு முதல் குரல் கொடுப்பது பாரதீய ஜனதா கட்சி மட்டும் தான்.

பா.ஜ.க.வின் தொண்டர்களின் ஒரே ஒரு செயல்பாடு என்னவென்றால் தேசப்பணியில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுவது தான்.

மத்திய மந்திரி அமித்ஷா, நாம் சித்தாந்தத்துடன் ஆட்சி செய்பவர்கள். தமிழகத்தில் ஒரு வெற்றிடம் தோன்றி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரம்புகின்ற விதமாக பா.ஜ.க. அதிக வேகத்தில் உருவெடுத்து மாறி கொண்டு வருகிறது.

அதிக வேகத்தில் செயல்படுகிறோம் என்ற எண்ணம் தொண்டர்களிடம் வந்து விட கூடாது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை ஓய கூடாது, தூங்க கூடாது. தமிழகத்தில் நாம் ஆட்சி செய்யும் வரை ஓய்வு எடுக்க கூடாது. நாம் நிச்சயமாக தமிழக்தில் ஆட்சி அமைப்போம். ஒவ்வொரு காரியகர்த்தாவை நம்பித்தான் இதை தெரிவிக்கிறேன் என்றார்.

4 சட்டமன்ற தொகுதியும்

இன்னும் கடக்க வேண்டிய தொலைவுகளும், எண்ணற்ற பணிகளும் நமக்காக காத்து கொண்டு உள்ளது. மாவட்ட தலைவர்கள் விருப்பு, வெறுப்பு அற்று அனைவரையும் ஒருங்கிணைத்து சகோதர, சகோதரிகளாக பாவித்து நீங்கள் செய்ய வேண்டிய கடமையில் முழுமையாக செயல்பட வேண்டும்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியும் வென்றெடுப்போம். அதற்கான களப்பணிகளில் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் மாநில பொதுச்செயலாளருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இதில் மாநில ஆன்மிக பிரிவு துணைத்தலைவர் சங்கர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், முன்னாள் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் சிவசங்கர், மாவட்ட துணைத் தலைவர் அருணை ஆனந்தன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் எஸ்.வினோத்கண்ணா, தொழில்பிரிவு மாவட்ட தலைவர் இ.நடராஜ், தண்டராம்பட்டு தி.அறவாழி, ஏ.இ.சி. ஏ.ஆர். விஜய், இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி.சந்தோஷ்பரமசிவம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் டி.ஆர். கிஷோர்குமார், எஸ்.கே.வி. காம்பிளக்ஸ் என்.மணிகண்டன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story