தமிழகத்தில் பா.ஜ.க.தான் உண்மையான அ.தி.மு.க.கே.எஸ்.அழகிரி கிண்டல்


தமிழகத்தில் பா.ஜ.க.தான் உண்மையான அ.தி.மு.க.கே.எஸ்.அழகிரி கிண்டல்
x

கே.எஸ்.அழகிரி கிண்டல்

ஈரோடு

தமிழகத்தில் பா.ஜ.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி கிண்டலாக கூறினார்.

ஒற்றுமை பயணம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து ஈரோடு ரெயில்வே டீசல் பணிமனை அருகில், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லில்லியாத், அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கடந்த 21 மாதத்தில் தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த தேர்தல் வெற்றியை பார்க்க உள்ளோம். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நடந்து இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதன் தாக்கத்தையும் இங்கு பார்க்க இருக்கிறோம். அ.தி.மு.க. போன்ற எதிர் கட்சிகள், தங்கள் இயலாமையால் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். யாரும், யாரையும் சிறை பிடிக்க முடியாது.

பணிமனைக்கு சீல்

நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதிக அளவில் மக்கள் வந்துள்ளனர். இவர்களை நாங்கள் சிறை பிடித்து அழைத்து வரவில்லை. மக்களோடு நாங்கள் பழகுவதால், எங்களுடன் வந்துவிட்டனர். ஈரோட்டில் 14 தேர்தல் பணிமனையை சீல் வைத்துள்ளனர். அதில் தி.மு.க. பணிமனையை மட்டுமில்லாமல், அ.தி.மு.க. பணிமனையையும் சீல் வைத்துள்ளனர். சிலர் அனுமதி இன்றி திறந்ததால் சீல் வைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் அவர்கள் கையில் உள்ளது. அதனை பா.ஜ.க. இயக்குகிறது. தேர்தல் ஆணையம் இப்போதுதான் பணி செய்ய தொடங்கி உள்ளதை காட்டுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்பது அனைவரும் அறிவார்கள். அ.தி.மு.க.வில் பழனிசாமி பன்னீர்செல்வம் என்பது அவர்களது சேட்டிலைட் சேனல்களாக இயங்குகிறது. வாக்காளர்களுக்கு மட்டன், சிக்கன் கொடுப்பதாக கூறுகின்றனர். எல்லா பகுதியிலும்தான் கடைகள் உள்ளன. எங்கு கொடுத்தார்கள் என கூறுங்கள். நாங்கள் பணம் கொடுத்து அடைத்து வைத்ததாக கூறுவது தவறு.

தோழமை கட்சிகள்

நாங்கள் பணம் கொடுப்பதால் மக்கள் வருவதாக கூறினால், அ.தி.மு.க.வினர் கொடுக்காத பணத்தைத்தான் நாங்கள் கொடுத்துவிடப்போகிறோமா?.

காங்கிரஸ் கட்சியைவிட தி.மு.க.வினர் அதிக அக்கறை காட்டி பிரசாரம் செய்வதாக கூறுவதை ஏற்கிறோம். எங்கள் கூட்டணி கட்சியினர் எங்களுக்கு உதவுவதால், கூட்டமாக பிரசாரத்தை செய்கிறோம்.

எங்களைப்போல் அ.தி.மு.க.வினர் உண்மையாக இல்லாததால் தான், அவர்களுக்கு கூட்டம் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story