மதம், மொழியால் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி -ராகுல்காந்தி


மதம், மொழியால் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி -ராகுல்காந்தி
x

மதம், மொழியால் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது என்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கண்ணைக்கவரும் முக்கடல் சங்கமிக்கும் அற்புதமான இடத்தில் மாபெரும் புனித பயணமான தேசத்தை ஒருங்கிணைக்கும் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்கு பிறகு தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் அவசியம் இப்போது எழுந்திருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இந்த பாதயாத்திரை நடக்கிறது. நமக்கு முன்பு காற்றில் அசைந்தாடும் மூவர்ண கொடியான தேசிய கொடியை பார்க்கிறோம். இந்த கொடியை பார்க்கும் போது வணங்கி மகிழ்கிறோம்.

சில பேர் இந்த மூவர்ண கொடியை பார்த்து, அதில் உள்ள சக்கரத்தை பார்த்து சாதாரண துணி என்று எண்ணலாம். இந்த கொடி நம்முடைய கைக்கு சாதாரணமாக வரவில்லை. இது நமக்கு பரிசாக தரப்படவில்லை. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு, வெல்லப்பட்ட கொடி ஆகும்.

பா.ஜ.க.வால் அச்சுறுத்தல்

இந்த கொடி ஒரு மதத்துக்கோ, ஒரு சாதிக்கோ, ஒரு மொழிக்கோ சொந்தமானது இல்லை. இது தேசத்தின் ஒவ்வொரு துகளுக்கும் சொந்தமான கொடி ஆகும். இந்த கொடி ஒரு நாட்டின் அடையாளம் மட்டுமல்ல, ஒரு மாநிலத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக இருக்கிறது.

இந்த கொடி இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கான உரிமைகளை பாதுகாக்கிறது. நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் கொடி ஆகும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிற மதத்தை, கலாசாரத்தை, மொழியை கொண்டாடும் உரிமையை தந்து இருக்கிறது.

இந்த கொடி தற்போது தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தியா என்பது திணிக்கப்பட்ட தத்துவம் அல்ல. இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் உருவம். இந்தியா என்ற நிறுவனம் தான் இதை பாதுகாக்க வேண்டும். இந்தியா என்ற தத்துவம் தான் பாதுகாக்க வேண்டும். இன்று இந்தியாவில் இருக்கிற ஜனநாயகம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது அவர்களுக்கான தனிப்பட்ட கொடி என்று நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்கள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

நாட்டை பிளவுபடுத்த முயற்சி

மதத்தின் மூலம் பிளவுபடுத்தலாம், மொழியின் மூலம் பிளவுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களால் ஒரு நாளும் தேசத்தை பிளவுப்படுத்த முடியாது. இந்த நாடு ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கும். இன்று வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வேலை இல்லாத திண்டாட்டம் உள்ளது. பேரழிவை நோக்கி தேசம் நகர்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

இந்த உரையை தொடங்குவதற்கு முன் எனது பயணத்தை வாழ்த்தி, மகிழ்வித்த சகோதரர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

வரும் நாட்களில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை பெறுவேன். இந்த கொடியை வணங்குவது முக்கியமல்ல. இதன் தத்துவத்தை, கொள்கையை நாம் காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story