கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வீடு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனாங்கூர் கிராமத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2016 முதல் 2021 வரை 110 வீடுகள் கட்டி முடிக்காமலேயே கட்டியதாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி நேற்று காலை பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் அய்யனார், பிரசார பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், மாவட்ட துணைத்தலைவர் சுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் முருகன், ஸ்ரீராம், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தலைவர் பூராசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோனிஷா மணி, சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முற்றுகை

இவர்கள் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அந்த அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். உடனே அவர்களை வளவனூர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story