போலீஸ் நிலையங்களை பா.ஜ.க.வினர் முற்றுகை
போலீஸ் நிலையங்களை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
ஆ.ராசா எம்.பி. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து மக்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் மண்டல தலைவர் மல்லி சேகர் தலைமையில், மாவட்ட தலைவர் ராஜசேகர், இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அப்போது அந்த புகாருக்கு மனு ரசீது வழங்க வேண்டும் என்று கேட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் நிக்சன், சுகுமாறன் ஆகியோர் நாளை (இன்று) வந்து மனு ரசீது பெற்று கொள்ளுமாறு கூறினர். ஆனால் இதை பா.ஜ.க.வினர் ஏற்க மறுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். பின்னர் போலீஸ் நிலையம் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதேபோல் உறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர். இதில் மனு ரசீது கேட்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திலும் பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.