மயானத்தை காணவில்லை எனக்கூறி கிராமசபை கூட்டத்திற்கு பாடை கட்டி மனு கொடுக்க வந்த பா.ஜனதா நிர்வாகிகள்-மல்லமூப்பம்பட்டியில் பரபரப்பு
சேலம் அருகே மல்லமூப்பம்பட்டியில் மயானத்தை காணவில்லை எனக்கூறி பாடை கட்டி ஊர்வலமாக வந்து கிராம சபை கூட்டத்தில் பா.ஜனதாவினர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
குடியரசு தினவிழாவையொட்டி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு தாக்கல், குடிநீர் பிரச்சினை, சுகாதாரம், வளர்ச்சி திட்டப்பணிகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாடை கட்டி...
அப்போது, சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் எம்.எல்.பி.முருகன் தலைமையில் அந்த கட்சியினர் ஊராட்சியில் உள்ள மயானத்தை காணவில்லை என்றும், அவற்றை கண்டுபிடித்து தரக்கோரி பாடை கட்டி, தாரை தப்பட்டை அடித்தவாறு நூதன முறையில் மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஊர்வலமாக வந்த பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
வாக்குவாதம்
இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் பா.ஜனதாவினர் கூறும்போது, சுடுகாட்டில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் அங்கு இறந்தவர்களின் உடலை புதைக்கவும், எரியூட்டவும் இடமில்லை. இதனால் மயானம் எங்கு இருக்கிறது? என்றே தெரியவில்லை. எனவே மயானத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைஉறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை. சாலை வசதி இல்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைத்தும் தண்ணீர் வருவது இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
அப்போது, அதிகாரிகளுக்கும், மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் இருந்தவர்கள் பா.ஜனதா நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரிடம் அவர்கள் மனு அளித்தனர். அதற்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதம் நடந்தது.
விரைவில் போராட்டம்
இதுகுறித்து சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் எம்.எல்.பி.முருகன் கூறும் போது,'மயானம், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீண்ட காலமாக உள்ளது. பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மயானத்தை காணவில்லை என்று பாடை கட்டி மனு கொடுக்க வந்தோம். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றார்.