பா.ஜ.க. சார்பில் கூடலூரில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் -அண்ணாமலை அறிவிப்பு


பா.ஜ.க. சார்பில் கூடலூரில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் -அண்ணாமலை அறிவிப்பு
x

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த இந்திய தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்து வருகிற 20-ந்தேதி கூடலூரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் 15 ஆயிரத்து 76 (மக்கள் தொகை-65,111) மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள், இன்றளவும் தமிழக அரசின் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தை (டான்டீ) மட்டுமே நம்பி வாழ்கின்றன.

ஆனால் 'டான்டீ' நிர்வாக இயக்குனர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், 'டான்டீ' வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை, அந்த நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்க பரிந்துரைத்தார். நடுவட்டம் கோட்டம், வால்பாறை கோட்டம், குன்னூர் கோட்டம், கோத்தகிரி கோட்டம், பாண்டியர் கோட்டம், சேரங்கோடு கோட்டம், நெல்லியாளம் கோட்டம், சேரம்பாடி கோட்டம் என மொத்தம் 2,152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என 'டான்டீ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.

மீண்டும் அகதியாக்குவதா?

ஆனால் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, டான்டீ நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு ரூ.5.98 கோடி மிச்சமாகும். இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதா? என்பதைகூட சிந்திக்கவில்லை இந்த அரசு. டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு, ஒரு அரசாணையையும் வெளியிட்டது.

அரசின் இந்த முடிவால் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. டான்டீ நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால், 2,400 குடும்பங்கள் மற்றும் 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு டான்டீ நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் வழக்கம்போல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, எம் மக்களை மீண்டும் அகதிகளாக்கி உள்ளது.

20-ந்தேதி ஆர்ப்பாட்டம்

நான் இலங்கை சென்றிருந்தபோது அங்கிருந்த மலையக தமிழர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு குடியுரிமை பெற்றும் எந்தவித வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் எம் மக்கள். இங்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அகதிகளாகவே வைத்துள்ளது தமிழக அரசு.

தி.மு.க.வின் இந்த இரட்டை நிலைப்பாடு, நம்பிவந்த நம் மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். உடனடியாக அனைவருக்கும் மாற்று வேலைக்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். அனைவரையும் நட்டாற்றில் விட்டதுபோல வெளியேற்றுவது தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். தற்காலிகமாக குடியிருப்புகளில் அவர்கள் வாழ இடம் மட்டும் கொடுப்பதால், அவர்களால் என்ன செய்ய முடியும்?.

இப்படி மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம், கூடலூரில் வருகிற 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுக்கும். அதில் நானும் நேரடியாக கலந்துகொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story