கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம்

கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
x

தி.மு.க. தலைவர்களை விமர்சித்து கைதான நபர் அழைத்து வரப்பட்டபோது போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவிடைமருதூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தி.மு.க. தலைவர்களை விமர்சித்து கைதான நபர் அழைத்து வரப்பட்டபோது போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவிடைமருதூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர்கள் மீது விமர்சனம்

காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரவீந்திரநாத்(வயது 51). பா.ஜனதா ஆதரவாளரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர்கள் குறித்து விமர்சித்து கருத்துகளை பரப்பி வந்தார்.

இவர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கும்பகோணம் அருகே உள்ள குறிச்சியை சேர்ந்த வக்கீல் ராஜசேகர் என்பவர் பந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்ரவீந்திரநாத்தை வலைவீசி தேடி வந்தனர். இதில் அவர் குஜராத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை குஜராத்தில் வைத்து கைது செய்த தமிழக போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்ததாக தகவல் பரவியது.

ஆர்ப்பாட்டம்

ஜான்ரவிந்திரநாத் குறித்து எந்த தகவல்களையும் போலீசார் வெளியிடாததால் போலீசாரை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜான் ரவீந்திரநாத்தை நேற்று மாலை திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவபழனி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜான் ரவீந்திரநாத்தை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி சிவபழனி தள்ளுபடி செய்தார்.

தி.மு.க. தலைவர்களை விமர்சித்து கைதான நபர் அழைத்து வரப்பட்டபோது போலீஸ் வேனை மறித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவிடைமருதூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜான்ரவீந்திரநாத்தை திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைக்க முடிவு செய்து போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது அவரிடம் பேச வேண்டும் என்று கூறி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ்குமார் தலைமையில் கும்பகோணம் மாநகர தலைவர் வாசன் வெங்கட்ராமன், மாநகர செயலாளர் பொன்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி, சிவசேனா மாநகர தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் போலீஸ் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் திருவிடைமருதூர் கிளைச்சிறை அருகே பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் போலீசார் ஜான் ரவீந்திரநாத்தை நேற்று திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story