கும்பகோணத்தில் தனியார் பள்ளிக்கு பாதை அமைத்து தரக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - 8 பேர் கைது
பா.ஜ.க.வினர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு போதுமான பாதை இல்லை எனவும், கூடுதலாக வழி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரி பா.ஜ.க.வினர் கடந்த 2 மாத காலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 25 பேர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், நகர தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவர்களை நீதிபதி வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு வேறு விசாரணை நடைபெற்று வருவதால், நீதிபதி அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க.வினர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு குவிந்தனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் இருந்து காவல்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.