பாஜக கொடி கம்பத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்


பாஜக கொடி கம்பத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல்
x

பாஜக கொடி கம்பத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே பாஜக சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது. கோவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கொடி கம்பம் நடப்பட்டதாக கூறி ஊராட்சி நிர்வாகம் பாஜக கொடிக்கம்பத்தை அறுத்து எடுத்து விட்டு அந்த பகுதி ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் எனக்கூறி வேலி அமைத்து போர்டு வைத்தது. பாஜக கொடி கம்பத்தை அகற்றிய திமுக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் கோவூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.ஜி.சூர்யா, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாங்காடு போலீசார் கைது செய்த போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பாஜகவினர் திடீரென குன்றத்தூர் - போரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றியதால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story