மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x

மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் மதுக்கடையை முழுமையாக மூட வலியுறுத்தி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோன உயிரிழப்புக்கு தி.மு.க. அரசே காரணம். தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. அதனால் அதிகளவில் இளம் விதவைகள் உருவாகின்றனர். இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையையே இழந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் அய்யப்பன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story