அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி பா.ஜனதாவினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும் பெரம்பலூர் நகர பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜனதாவினர் கூறியதாவது:- அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கிட வேண்டும். மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை அறவே ஒழித்திட வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.
கோவில்களை இடிக்க கூடாது
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தடுக்க கூடாது. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களில் ஊழல் செய்யக்கூடாது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும். கோவில்களை இடிக்க கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், குரும்பலூர், மேலப்புலியூர், எசனை, அம்மாபாளையம், லாடபுரம், களரம்பட்டி ஆகிய பகுதிகளிலும் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.