பா.ஜ.க.வினர் சாலை மறியல்; 20 பேர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 20 பேர் கைது
நிலக்கோட்டை பஸ் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள், அப்பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதையறிந்த பா.ஜ.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் திரண்டனர்.
பின்னர் வடக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கரன் தலைமையில் மரங்களை அகற்றுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.