கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரி பா.ஜனதா போராட்டம்


கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரி பா.ஜனதா போராட்டம்
x

கனிமவள கொள்ளையை தடுக்கக்கோரி பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறினார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட பா.ஜனதா பார்வையாளருமான எம்.ஆர்.காந்தி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் ராணுவம், கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு தேவையான கடன் வசதி செய்யப்பட்டு உள்ளது. சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை மாற்றக்கூடாது. அவ்வாறு இன்றி மாற்றினால் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனிமவள கொள்ளை நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், விதிகளுக்கு முரணாக தனது லெட்டர்பேடில் ஆதரவாளர்களுக்கு ஒப்பந்த பணி அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை அவமதித்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட பா.ஜனதா தலைவர் ராஜேஷ் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராமராஜா, மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் வெங்கடேச பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொது செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story