பா.ஜ.க. பிரமுகர் கொலையான சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள்;சமூக வலைதளங்களில் வைரல்
பூந்தமல்லி அருகே பா.ஜ.க. பிரமுகர் கொலையான சம்பவத்தின்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் பி.பி.ஜி.டி.சங்கர். பா.ஜ.க.வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராகவும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த மாதம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், அவரை ஓட, ஓட விரட்டியும் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் 9 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நசரத்பேட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தொழில் போட்டியில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி
இந்தநிலையில் பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி.சங்கர், கொலை செய்யப்பட்டபோது, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தனது காரின் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதும், காரை நிறுத்திவிட்டு பி.பி.ஜி.டி.சங்கர் கையில் அரிவாளுடன் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பிக்க அருகில் உள்ள தெருவுக்குள் ஓடுகிறார். அந்த கும்பலும் விடாமல் அவரை விரட்டுகிறது. மேலும் 2 கார்களிலும் பின்தொடர்ந்து விரட்டுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பி.பி.ஜி.டி.சங்கர், மீண்டும் சாலையை நோக்கி தப்பி வருகிறார். அப்போது அந்த கும்பல் அவரை மடக்கி சரமாரியாக கொடூரமான முறையில் வெட்டுகிறார்கள். மேலும் காரையும் அவர் மீது ஏற்றுகிறார்கள். அதன்பிறகும் விடாமல் அவரை வெட்டுவதுடன், 2 கார்களையும் மீண்டும் அவர் மீது ஏற்றிவிட்டு அந்த கும்பல் தப்பிச்செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.