எதிர்க்கட்சிகளை மிரட்டி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க. முயற்சி


எதிர்க்கட்சிகளை மிரட்டி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க. முயற்சி
x

வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

வருமான வரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார்.

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை என்ன? என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதலில் கேள்வி எழுப்பினார். அப்போது 10 நாட்களுக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்தார்.

அமைச்சர் வீட்டில் சோதனை

அவர் அறிவித்தது போலவே 10 நாட்களுக்கு பிறகு கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடுகள், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 8 நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று(அதாவது நேற்று) அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறைக்கு சென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

ஓரணியில் திரள வேண்டும்

இந்த சோதனைக்கு காரணம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் பலமாக உள்ளது. பிற மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டணி உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் தமிழகத்தில் தி.மு.க. தலைமை தாங்கும் கட்சியாக உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வந்தார். அவர் வந்த அடுத்த நாளே வருமான வரித்துறை சோதனை அரங்கேற்றப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை மிரட்டி...

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படாமல் பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் சொல்வதை நிறைவேற்றும் அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை வருமான வரித்துறை மூலம் மிரட்டி அதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.

கண்டிக்கத்தக்கது

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story