அம்பேத்கரை வாக்கு வங்கி கருவியாக பா.ஜ.க. பார்க்கிறது


அம்பேத்கரை வாக்கு வங்கி கருவியாக பா.ஜ.க. பார்க்கிறது
x

அம்பேத்கரை வாக்கு வங்கி கருவியாக பா.ஜ.க. பார்க்கிறது

தஞ்சாவூர்

அம்பேத்கரை, பா.ஜ.க., வாக்கு வங்கி கருவியாக பார்க்கிறது என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.

கி.வீரமணி பேட்டி

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமத்துவம் வரவில்லை

அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உறுதிமொழி ஏற்க செய்துள்ளார். நாட்டில் இன்னும் சமத்துவம் வரவில்லை.

அரசியல் சுதந்திரம் கிடைத்து சமூகத்தில் மாற்றங்கள், புரட்சிகள் வரவில்லை என்றால் அந்த அரசியல் சுதந்திரம் பயனற்றது என டாக்டர் அம்பேத்கர் சொன்னார். அதைத்தான் இன்றைக்கு நடைமுறையில் பார்க்கிறோம்.

தீண்டாமை ஒழிப்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்தி இருந்தாலும் இன்னும் பல இடங்களில் முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அதற்கு எதிரான பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள். நேரடியாக இல்லையென்றாலும் பலரும் மறைமுகமாக அதற்கு குழி தோண்டுகிறார்கள். அம்பேத்கரும், பெரியாரும் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அனைவரும் சமமானவர்கள். அனைவரும் உறவினர்களே என்ற மனித நேயத்தை உருவாக்க வேண்டும். அதற்கு கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கு திராவிட மாடல் ஆட்சி சமத்துவ நாளாக அறிவித்து வழிகாட்டி உள்ளது. அதை வெறும் நாள் பிரகடனமாக இல்லாமல் உண்மையிலேயே சமத்துவம் நடக்கக்கூடிய அளவிற்கு வரவேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் தர வேண்டும்.

வாக்கு வங்கி கருவி

இன்னமும் தீண்டாமை, சாதி வெறி முழுமையாக ஒழிக்கப்படவில்லை. பல இடங்களில் திருவிழா கூட நடத்த முடியவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என அரசியல் சட்டத்தில் எழுதி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நடைமுறையில் பல இடங்களில் தீண்டாமை இன்னமும் உள்ளது. தனி சுடுகாடு என்ற நிலை உள்ளது.

சமத்துவமும், சாதி ஒழிப்பும் இன்னமும் சென்று சேர வேண்டிய இலக்கு நிறைய உள்ளது. அதற்கான உறுதி மொழியை இந்த அரசு எடுக்கும். தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மூலம் தீண்டாமை கொடுமை படிப்படியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அம்பேத்கரை சமுதாய புரட்சியாளராக பார்க்கிறோம். ஆனால் பா.ஜ.க. வாக்கு வங்கி கருவியாக பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story