ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க நினைக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை  பாஜக அழிக்க நினைக்கிறது -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஒரே மொழியை வைத்து தேசிய இன மக்களின் மற்ற மொழிகளை பாஜக அழிக்க நினைக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவு கூற கூடிய நாள் தான் இந்த வீரவணக்க நாள்.

ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்திய ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை விலையென கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிற நாள் இந்த நாள்.

தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது. 1938 முதல் 1940 வரை முதல் களம், 1948 முதல் 1950 இரண்டாம் களம், 1953 முதல் 1956 வரை மூன்றாம் களம், 1959 முதல் 1961 வரை நான்காம் களம், 1986 ஐந்தாம் களம் இந்த தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காக தான்.

ஒரு நல்ல காரியத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழ்ந்து தமிழுக்காக உயிரீந்தவர்கள் தான் இந்த மொழிப்போர் தியாகிகள். மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்தி மொழியை திணிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க பார்க்கிறார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story