அ.தி.மு.க.வின் வலிமையை பா.ஜ.க.வினர் உணர்வார்கள்
அ.தி.மு.க.வின் வலிமையை பா.ஜ.க.வினர் உணர்வார்கள் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் இணைந்துள்ளது பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் இணைந்துள்ள கதை தான். ஓபன்னீர்செல்வம் சபரீசனை தனி அறையில் சந்தித்தது அ.தி.மு.க. தொண்டர்களிடையே மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.ம.மு.க. காலியான கூடாரம் ஆகும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் வலிமை அதிகரித்துள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுக்கு பின்பு பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வின் வலிமையை உணர்வார்கள் என்பது உறுதி. கர்நாடக தேர்தல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. விருதுநகர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் தொழில்பூங்கா திட்டத்தை அறிவித்தது ஜெயலலிதா தான். இதற்கான நிலத்தை தயார் செய்தது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான முதலீடு ரூ. 2 ஆயிரம் கோடியை தருவது மத்திய அரசு. இதை எதையுமே அங்கீகரிக்காமல் தி.மு.க. அரசு இத்திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தது போல் சொல்வது ஏற்புடையது அல்ல. புதிதாக பொறுப்பேற்றுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை அங்கீகரித்து அவர்களிடமிருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.