2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் பா.ஜ.க. தேசிய ஒருங்கிணைப்பாளர் பேட்டி
2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் பா.ஜ.க. தேசிய ஒருங்கிணைப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
திருமங்கலம்
திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுடெல்லி தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆவணப்படுத்தல் மற்றும் நூலகத்துறை டாக்டர் ஆசீர்வாதம் ஆச்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அனைத்து அமைச்சர்களும் அங்கு அரை மணி நேரத்திற்குள் அங்கு பார்க்கின்றனர். ஒரு மணி நேரத்தில் முதல்-அமைச்சர் எல்லா பணிகளையும் விட்டுவிட்டு செந்தில் பாலாஜியை சந்திக்கிறார். இது ஏன் என்பது மிகப்பெரிய கேள்வி?. செந்தில் பாலாஜி முதல்-அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அவர் வேறு ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தின் காரணமாக முதல்-அமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் அங்கு விரைந்து சென்றுள்ளனர். 2ஜி வழக்கில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருந்தார்களோ அனைவரும் மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் உள்ள விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். விரைவில் 2ஜி வழக்கு இறுதி தீர்வை நோக்கி நகரும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், கூட்டுறவு மாநில தலைவர் மாணிக்கம், மாநில சிறுபான்மையினர் துறை தலைவர் எம்.எஸ்.ஷா, திருமங்கலம் நகர்மன்ற தலைவர் விஜயேந்திரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.