கவர்னருடன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு


கவர்னருடன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு
x

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முன்னாள் மேயர் கார்த்திகாயினி, முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, புகார் மனு ஒன்றை கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

போலி பாஸ்போர்ட்

கடந்த 2019-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று இலங்கைக்கு செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோன்று மதுரையில் இருந்து துபாய்க்கு போலி பாஸ்போர்ட் மூலம் சென்ற மற்றொரு நபரும் கைதானார்.

இதேபோன்று 53 போலி பாஸ்போர்ட்டுகள் மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து மட்டும் வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்த போலி பாஸ்போர்ட்டு வழங்கும்போது அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இளவரசு, நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக தர்மலிங்கம், உதவி கமிஷனராக சிவக்குமார், மதுரை நகர போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இருந்தனர்.

22 பேருக்கு தொடர்பு

இந்த விவகாரத்தில் 22 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஐ.ஜி. (உள்நாட்டு பாதுகாப்பு) ஈஸ்வரமூர்த்தி, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை அளிக்கக்கோரியும், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்கவும் டி.ஜி.பி.யை கோரி உள்ளார்.

ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதுபோன்ற தாமதத்தால் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது. மதுரையின் கமிஷனராக இருந்தவரின் அனுமதியில்லாமல் போலி பாஸ்போர்ட்டு வழங்க வாய்ப்பு இல்லை.

சி.பி.ஐ. விசாரணை

மதுரையில் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு முகமை போன்ற ஏதாவது ஒரு விசாரணை அமைப்புக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் சில ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு, பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு கேள்விக்குறி

தமிழ்நாட்டில் நடைபெறும் தேசவிரோத செயல்கள் குறித்து கவர்னரிடம் புகார் அளித்துள்ளோம். தேசவிரோத செயல்கள், தமிழ்நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். விமானப்படை தளபதி வீட்டு முகவரியிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 200-க் கும் மேல் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story