நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 20 தொகுதிகளை கைப்பற்றும் தமிழக பொறுப்பாளர் அசோக்நேத்தே பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கட்சியின் தமிழனக பொறுப்பாளர் அசோக்நேத்தே எம்.பி.கூறினார்.
திருப்பத்தூர்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கட்சியின் தமிழனக பொறுப்பாளர் அசோக்நேத்தே எம்.பி.கூறினார்.
கருத்தரங்கு
பா.ஜ.க.வின் தமிழ்நாடு பழங்குடியினர் நல அணி சார்பில் 3 நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் எஸ்.டி.பிரிவு மாநில தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அசோக்நேத்தே எம்.பி., மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அசோக்நேத்தே எம்.பி. கூறியதாவது;
நான் தற்போது தமிழகம்உட்பட 6 மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் பழங்குடி மக்கள் 6 சதவீதம் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களுக்கு தேவையாக சாதி சான்றிதழ் உள்பட அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 முதல் 25 தொகுதிகளில் பா.ஜ.க.வெற்றி பெறும்.தற்போது தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைவிட மோசமாக இருந்த பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளோம்.
அனைத்து விதமான வசதிகள்
மராட்டியத்தில் முதல்-அமைச்சர் ஏசுதாஸ் ஷிண்டே மற்றும் துணை முதல்-அமைச்சர் தேவேந்திரபட்னாவிஷ் ஆகியோர் மிக சிறப்பாக செநயல்பட்டு வருகின்றனர்.மும்பையில் தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் மகாராஷ்டிரா அரசு செய்து வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400-க்கும் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து இதுவரை நாடாளுமன்றத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.