மக்களை திசை திருப்ப பா.ஜனதா நடத்தும் நாடகம்
அண்ணாமலை வெளியிட்ட பட்டியலை பற்றி கவலையில்லை. மக்களை திசை திருப்ப பா.ஜனதா கட்சி இப்படி நாடகம் நடத்துகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
அண்ணாமலை வெளியிட்ட பட்டியலை பற்றி கவலையில்லை. மக்களை திசை திருப்ப பா.ஜனதா கட்சி இப்படி நாடகம் நடத்துகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை
நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தந்த அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நீதி படைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். அனைத்து மக்களுக்கும் சமூக நீதி, சமத்துவத்தை ஏற்படுத்த இந்த நேரத்தில் உறுதி ஏற்போம்.தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியலை பற்றி கவலைப்படவில்லை. பா.ஜனதா கட்சி ஊழலைப் பற்றி பேச தகுதியில்லாத கட்சி. தமிழகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ள கட்சி, அந்த கட்சி ஆகும்.
பா.ஜனதா நடத்தும் நாடகம்
இதேபோல கர்நாடகாவில் நடைபெற்று வரும் பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. நீரவ் மோடி தொடங்கி இன்றைக்கு இருக்கிற அதானி வரை ஏற்பட்டிருக்கிற ஊழல் அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் உள்ள தீவிர குற்ற செயல்களை புரிந்தவர்கள் பா.ஜனதா கட்சியில் தான் உள்ளனர். குற்ற செயல்களை செய்தவர்களை பா.ஜனதா கட்சியில் சேர்த்து அந்த ஊழல்களை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு கட்சி, ஊழலை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆட்சியை பற்றி பேச பா.ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. பா.ஜனதா ஆளுகின்ற மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆகியோருடைய ஊழல் பட்டியலையும் அவர் சேர்த்து சொல்லட்டும்.
மக்களை திசை திருப்புவதற்காக இப்படி ஒரு நாடகத்தை பா.ஜனதா கட்சி நடத்துகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கியாஸ் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பா.ஜனதா கட்சியின் ஊழலை யாரும் வெளியிட வேண்டியது இல்லை. அவர்களின் ஊழல், சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது. நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இது போன்ற ஒரு செயலை பா.ஜனதா செய்து வருகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ண வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மேயர் மகேஷ் உடன் இருந்தார்.