பா.ம.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்,
சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்தி சென்றது தொடர்பாக திண்டிவனம் 20-வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவரான மரூர் ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மரூர் ராஜாவுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரவாக செயல்பட்டனர் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது.
இதனிடையே அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மரூர் ராஜா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் நடைபெறும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்டப்படும் என பா.ம.க.வினர் தெரிவித்தனர்.
பா.ம.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம்
அதன்படி பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியில் அக்கட்சியினர் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கையில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற இருந்த தீர்த்தகுளம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார், பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது பா.ம.க.வினர் அங்கு அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி பா.ம.க.வினர் 55 பேரை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பாலாஜி, நகர செயலாளர் ராஜேஷ், பூதேரி ரவி, முன்னாள் நகர செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.