50 சதவீத மானியத்தில் விதைகள் வினியோகம்


50 சதவீத மானியத்தில் விதைகள் வினியோகம்
x

திருவோணம் வட்டாரத்தில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில் சான்று விதைகள் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணம் வட்டாரத்தில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில் சான்று விதைகள் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.இது குறித்து திருவோணம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-

உளுந்து சாகுபடி

திருவோணம் வட்டாரத்தில் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து 10 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அறுவடை பணிகள் வரும் மார்ச் முதல் வாரத்துக்குள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் நெல் அறுவடை முடிந்த நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். இவ்வாறு உளுந்து பயிர் சாகுபடி செய்வதின் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம். நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறுகிய நாட்களில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதோடு மண் வளத்தையும் காக்க முடியும். மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பயறு வகை பயிர்கள் முக்கிய பங்கு வைக்கின்றன.

50 சதவீத மானியம்

இதனால் நெல் தரிசில் உளுந்து விதைப்பு செய்ய 13 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்குரிய சான்று பெற்ற உளுந்து விதைகள் திருவோணம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பெயரை உழவன் செயலியில் முன்பதிவு செய்து 50 சதவீத மானியத்தில் சான்று விதைகளை பெற்றுக் கொள்ளலாம். இதைப்போல கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள காடுவெட்டிவிடுதி, காரியாவிடுதி, தளிகைவிடுதி, அம்மங்குடி, பின்னையூர், வடக்கு கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்து உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story