பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூச்சு; 3 பேர் கைது


பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூச்சு; 3 பேர் கைது
x

சென்னை அடையாறு பகுதியில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூசியவர்கள் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.





சென்னை,



சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பர பதாகைகளில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், பா.ஜ.க.வினர் பிரதமரின் புகைப்படம் ஒன்றை சென்னை அடையாறு பகுதியில் உள்ள சுவரொட்டியின் மீது ஒட்டினர்.

இதனையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலர் அந்த படத்தின் மீது கருப்பு மை ஸ்பிரே அடித்து, அதனை அழித்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, போலீசார் விசாரணை செய்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்டதற்காக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 3 பேரை போலீசார் கைது செய்து சென்றுள்ளனர்.




Next Story