சீரமைக்கப்பட்ட சாலையில் மீண்டும் வெடிப்பு
திருவட்டாரில் சீரமைக்கப்பட்ட சாலையில் மீண்டும் வெடிப்பு
திருவட்டார்,
மார்த்தாண்டம்-பேச்சிப்பாறை நெடுஞ்சாலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தார் போட்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையில் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தார் போட்டு வெடிப்பை சரி செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஒப்பந்தகாரர் தரப்பில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சாலை சீரமைக்கப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டனர். இந்த நிலையில் நேற்று அந்த சாலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சாலை விரைவில் சேதமடையும் அபாயம் உள்ளது.
எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். மேலும், சாலையின் இருபுறமும் அலங்கார தரைகற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யதுதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.