தேசிய போட்டியில் முதலிடம்; தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


தேசிய போட்டியில் முதலிடம்; தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
x

‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' என்ற தேசிய போட்டியில் முதலிடம் பிடித்த தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேனி

இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டி, பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் உலகில் உள்ள பல்வேறு மொழிகளை இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் மாற்றம் செய்து அறிந்து கொள்ளும் வகையில் மென்பொருள் உருவாக்கும் திட்டம், தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த மென்பொருள் உருவாக்கும் போட்டியில் இறுதி தகுதிப்போட்டிக்கு தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உள்பட 4 கல்லூரிகள் தகுதி பெற்றன. பின்னர் பெங்களூருவில் தொடர்ச்சியாக 36 மணி நேரம் 3 சுற்றுகளாக இறுதிப்போட்டி நடந்தது. இதில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கணினி மற்றும் அறிவியல் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகளான சரவணன், ஹரிபிரசாத், ரேவந்த் ரமேஷ், சாருமதி, பிரியங்கா, கபிதா ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று, தாங்கள் உருவாக்கிய தேசிய மொழி செயலாக்கம் (என்.எல்.பி.) என்ற மென்பொருளை சமர்ப்பித்தனர். அது சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான பரிசு காசோலை வழங்கப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்குமார், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜவஹர், கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திய பேராசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், இணைச்செயலாளர் நவீன்ராம், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணைமுதல்வர் மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story