புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல்
பெரும்பாைற அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யாத நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நீர்வீழ்ச்சியில் குறைவான அளவு தண்ணீர் கொட்டுகிறது. இருப்பினும் வார விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்தனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்தனர். ஆனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். மேலும் சிலர், ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டனர்.