வழிப்பறி, தகராறில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்


வழிப்பறி, தகராறில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Jan 2023 10:15 PM IST (Updated: 10 Jan 2023 10:16 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் வழிப்பறி, தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மது, கஞ்சா போதையில் வழிப்பறி, தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2 பேர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கல்நகர் சுடுகாடு பகுதியில் கஞ்சா போதையிலும், மதுபோதையிலும் அவ்வப்போது சிலர் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் இரவு நேரங்களில் சென்றுவர அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று கல்நகர் சுடுகாடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த முகல்புறா தெருவை சேர்ந்த நசீர் மற்றும் முன்னா ஆகியோரை போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் தகராறில் ஈடுபட்ட நபர்களை அவர்கள் பிடிக்க முயன்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அந்த நபரை அவர்கள் அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நபரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள், கல்நகர் சுடுகாடு அருகில் கஞ்சா, மது போதையில் சிலர் தகராறிலும், வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது தகராறில் ஈடுபட்டு தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் மதியம் 1 மணி வரை தப்பியோடிய நபர்களை போலீசார் கைது செய்யாததை கண்டித்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோபால் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வந்து போலீசாருடன் இணைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தகராறு மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் போதையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மறியல் போராட்டம் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story