மாற்று இடம் வழங்காத என்.எல்.சி.யை கண்டித்துகத்தாழை கிராம மக்கள் அறிவித்த முற்றுகை போராட்டம் வாபஸ்அதிகாரியின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மாற்று இடம் வழங்காத என்.எல்.சி.யை கண்டித்து கத்தாழை கிராம மக்கள் இன்று நடத்த இருந்த முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மந்தாரக்குப்பம்,
புவனகிரி தாலுகா, கத்தாழை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி சுப்பையா நகரில் சுமார் 85 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்காக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கான பணிகளை அவர்கள் தொடங்கி இருந்தனர்.
இந்த நிலையில், என்.எல்.சி.யின் 2-வது நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்கு அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது, எனவே வீடு கட்ட வேண்டாம், அதற்கு பதிலாக மாற்று இடமாக பழையநெய்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தருவதாக என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அரசு, அவர்களுக்கு வழங்கிய பட்டாவையும் திரும்ப பெற்றுக்கொண்டது.
முற்றுகை போராட்டம்
இதன்பின்னர், நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணியும் அந்த பகுதியில் நடந்தது. ஆனால், மக்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. எனவே பல ஆண்டுகளாக அவர்கள், நிலையான இடமின்றி ஆங்காங்கே தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
இதுபற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இ்ல்லை. இந்நிலையில் தங்களுக்கு மாற்று இடம், உரிய இழப்பீடு, என்எ.ல்.சி.யில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31-ந்தேதி(அதாவது இன்று) நெய்வேலியில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
13-ந்தேதிக்கு பின்னர் முடிவு
இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மக்களை மந்தாரக்குப்பத்தில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்திற்கு துணை கலெக்டர் மனோகரன் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, 13-ந்தேதியில் தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வர்கம் மற்றும் கத்தாழை கிராம மக்கள் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் உரிய தீர்வு காணலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். அதேவேளையில் வருகிற, 13-ந்தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பதாக கூறி, அங்கிருந்து கலைந்து சென்றனர்.