சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் சாலை மறியல்
அரக்கோணம் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுடுகாடு பாதை
அரக்கோணம் அருகே மாங்காட்டுசேரி கிராமம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சஞ்சீவி அம்மாள் (வயது 90) என்பவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல தனி நபரின் விவசாய நிலம் வழியாக தான் செல்ல வேண்டும்.
சாலை மறியல்
இதனால் சுடுகாட்டுக்கு தனியாக பாதை வேண்டும் என கூறி திடீரென தக்கோலம் செல்லும் தக்கோலம் கூட் ரோட்டில் பிணத்தை வைத்து 60-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் செல்வி, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவலர்கள் திவாகர், நெடுஞ்செழியன் மற்றும் தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனையடுத்து மறியலை கைவிட்டு பிணத்தை கொண்டு சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.