கழிவுநீர் செல்லும் வழியை அடைத்ததால்பொதுமக்கள் சாலை மறியல்; 2 பஸ்கள் சிறைபிடிப்பு
பெருந்துறை அருகே கழிவுநீர் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 2 அரசு டவுன் பஸ்களையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை அருகே கழிவுநீர் செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 2 அரசு டவுன் பஸ்களையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் கொண்டு நிரப்பி...
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட மேற்கு ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பகுதி ராம்நகர். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியின் கழிவு நீரானது வாணிகவுண்டன்பாளையம் ரோட்டின் குறுக்கே அமைந்துள்ள ஓடை பள்ளம் வழியாக குள்ளம்பளையம் ஊராட்சி பகுதிக்குள் சென்று இறுதியில் பட்டக்காரன்பாளையம் ஊராட்சி குட்டைக்கு செல்கிறது.
ராம்நகரின் கழிவு நீரானது, எக்காரணத்தை முன்னிட்டும் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என குள்ளம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கழிவுநீர் செல்லும் ஓடையின் சிறு பாலத்தின் வெளிப்புற வழியை மண் கொண்டு நிரப்பி அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்- பஸ்கள் சிறைபிடிப்பு
இதுபற்றி அறிந்ததும் ராம்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, ஆயிக்கவுண்டன்பாளையம் -வாணிகவுண்டன் பாளையம் செல்லும் ரோட்டுக்கு காலை 8 மணி அளவில் வந்தனர். பின்னர் ரோட்டின் குறுக்கே உட்கார்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சீனாபுரத்தில் இருந்து நடுப்பட்டி செல்லும் வாணிகவுண்டன்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த 2 அரசு டவுன் பஸ்களையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறை பிடிக்கப்பட்ட டவுன் பஸ்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சின்னச்சாமி, ஒன்றியக்குழு கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் டி.சி.சுப்பிரமணியம், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி விஸ்வநாதன், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர் அர்ச்சுணன் ஆகியோர் விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர்கள் கூறுகையில், 'கழிவு நீரானது நீரோடை வழியாக செல்வதை தடுத்து, அதற்கு மாற்று வழி ஒன்று விரைவில் உருவாக்கப்படும். அதுவரை நீரோடைக்கு செல்லும் வழியை மண் கொண்டு அடைக்கப்பட்ட அடைப்பு உடனடியாக அப்புறப்படுத்தப்படும்,' என்றனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.