போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்


போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்
x

திருப்பத்தூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில். கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 325 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தடுப்புகளை அகற்ற வேண்டும்

திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் செந்தில்முருகன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சூரியகுமார் மற்றும் நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் திருப்பத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களும், 100-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களும் வணிகத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். தற்போது தனியார் நிறுவனம் சில்லறை வணிகர்களையும், மொத்த வணிகர்களையும் நசுக்கும் வகையில் நகர பகுதியில் விநியோகம் செய்து வருகிறது. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எங்களை காக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் திருப்பத்தூர் பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் திருப்பத்தூர் நகரில் பேரிகார்டு அமைத்து பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், புறநோயாளிகள் ஆம்புலசில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி சீனிவாசா கேப், தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். மேலும் மீனாட்சி நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.

நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 5 பேருக்கு திறன் செயலியுடன் கூடிய கைப்பேசிகள், 10 பேருக்கு கருப்பு கண் கண்ணாடி என மொத்தம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவல பாலாஜி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story