மெயின் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்


மெயின் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்
x

திருப்பத்தூர் நகரின் மெயின் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புபகளை அகற்றி வழி ஏற்படுத்த வேண்டுமென நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பத்தூர்

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

டாக்டர் வினோதினி (அ.தி.மு.க.): 35-வது வார்டு டி.எம்.சி. காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இடம் தேவைப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் வணிக வளாகம், சமுதாயக்கூடம், நகர நல் வாழ்வு மையம், ரேஷன் கடை மற்றும் குழந்தைகளுக்கான அங்கன்வாடி அமைத்து தர வேண்டும். எனவே முதலாவது தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தலைவவ்சங்கீதா வெங்கடேஷ்:- ஒன்றாவது தீர்மானத்தை ரத்து செய்வது குறித்து ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்றார். அனைவரும் ஆதரவு தெரிவித்தால் முதல் தீர்வானம் ரத்து செய்யப்பட்டது.

நகராட்சியுடன் இணைக்க வேண்டும்

வெற்றி கொண்டான் (வி.சி.க.): 36-வது வார்டு திருமால் நகர் குடியரசு நகர், குள்ளாட்சி வட்டம், பவச நகர், கிராமப் பகுதியில் இருந்து நகராட்சியில் இணைக்கப்பட்டதால் அந்தப் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிகள், குடிநீர் வசதி செய்யப்படவில்லை, குடிநீர் லாரி மூலம் அனுப்பப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நகராட்சி பகுதியில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா (தி.மு.க.): வார்டுகள் 8, 11, 12, 23, ஜின்னா ரோடு எல்லையம்மன் கோவில் தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து பத்துக்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறி உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்ய கடந்த கூட்டத்தில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். வார்டுகள் 8, 9, 10, 11, ஆகிய பகுதிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆலமர பகுதியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும்.

தடுப்புகள்

தலைவர்: அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்க திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என். அண்ணாதுரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் குடிநீர் தொட்டி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டி.டி.சி.சங்கர் (அ.தி.மு.க.): அவ்வை நகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது. அதனை தீர்க்க லாரி மூலம் தண்ணீர் அனுப்பக் கூறினால் லாரி ரிப்பேர் என கூறுகிறார்கள். ரேஷன் கடை பழுதடைந்து உள்ளது. புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும். வாணியம்பாடி- சேலம் தேசிய நெடுஞ்சாலைக்காக திருப்பத்தூர் மெயின் ரோடு முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு விட்டதால் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அலுவலகத்திற்கு வருபவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் சுற்றிவர வேண்டி உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசில் ஏற்படுகிறது. எனவே தடுப்புகளை அகற்ற வேண்டும். இதே கோரிக்கையை அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.

பிரேம்குமார் (தி.மு.க): திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு அருகே உள்ள சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொறியாளர்: சுடுகாட்டை சுத்தப்படுத்தி தனி வழி ஏற்படுத்தி அழகு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது. கவுன்சிலர்கள் கோபிநாத், குட்டி என்கிற சீனிவாசன், சரவணன் ஆகியோரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


Next Story