ரூ.20 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு சேவை
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.20 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு சேவையை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.20 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு சேவையை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கிவைத்தார்.
ரத்த சுத்திகரிப்பு சேவை
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு ரத்த சுத்திகரிப்புசேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கலந்து கொண்டு ரத்த சுத்திகரிப்பு சேவையை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 32 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் 2 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 4 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ரத்த சுத்திகரிப்பு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரூ.20 லட்சம்
இந்த வசதி மூலம் தீவிர சிகிச்சை பகுதி மற்றும் விஷமுறிவு, பாம்புக்கடி போன்ற நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்து, உயிரைக் காக்கும் நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த கருவிகள் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100 பேர் ரத்த தானம் செய்தனர்.இவ்விழாவில் கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலர்கள் செல்வம், கவுதமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.