ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை


வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடந்தது. 8 பேர் வரவில்லை.

புதுக்கோட்டை

வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரி மற்றும் அந்த தொட்டியில் இருந்த நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பியது தொடா்பாக வேங்கைவயல் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் முரளி ராஜா உள்பட 2 பேரிடம் கடந்த 21-ந் தேதி சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரத்த மாதிரி பரிசோதனை

இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர்.

அந்த 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று டி.என்.ஏ. பரிசோதனை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரத்த மாதிரி பரிசோதனைக்காக வேங்கைவயல் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை போலீஸ்காரர் முரளி ராஜா, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் காசி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா ஆகிய 3 பேரும் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

8 பேர் வரவில்லை

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்சி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார், அந்த 3 பேரையும் பரிசோதனை ஆய்வகத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்தில் இந்த பரிசோதனை முடிந்ததும் 3 பேரும் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் மீதமுள்ள 8 பேர் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வரவில்லை. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்ட போது கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுப்படி இந்த ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் மட்டும் பரிசோதனைக்கு வரவில்லை. அவர்கள் வராததற்கான காரணம் குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

பரிசோதனை முடிவுகள் ஒவேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடந்தது. 8 பேர் வரவில்லை.ப்பிடப்படும்

ரத்த மாதிரி எடுக்கப்பட்ட 3 பேரின் பரிசோதனை அறிக்கை மருத்துவமனை நிர்வாகம் மூலம் கோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். கோர்ட்டில் இருந்து அந்த அறிக்கை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். ஏற்கனவே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரி, நீரின் மாதிரிகளில் கிடைத்த அறிக்கையோடு, இந்த ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை ஒப்பிடப்படும். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பரிசோதனை முடிவு எப்போது வரும் என்று தெரியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரத்த மாதிரி பரிசோதனைக்கு 8 பேர் வராதது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.


Next Story