ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம்


ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம்
x

நாமக்கல்லில் நேற்று ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, ரத்ததான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.

இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் "ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்" என்பதாகும். ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின் போது 350 மி.லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.

கலெக்டர் ஆய்வு

18 முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி, அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்ததான மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story