கறம்பக்குடி பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்
கறம்பக்குடி பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள் ஆயுத பூஜை வழிபாட்டிற்காக அறுவடை செய்யப்படுகின்றன. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி:
பூக்கள் சாகுபடி
கறம்பக்குடி பகுதியில் நெல், கரும்பு, வாழை, சோளம், ஆகியவற்றோடு மலர் சாகுபடியிலும் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திகாடு, சூரக்காடு, வெட்டன் விடுதி, மழையூர், அம்புக்கோவில், ரெகுநாதபுரம், தட்டாவூரணி உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. சாமந்தி, செவ்வந்தி, கோழிகொண்டை, செண்டி உள்ளிட்ட பூக்கள் இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
அறுவடை பணிகள்
குறிப்பாக சாமந்தி பூக்களுக்கு செலவு குறைவு, தண்ணீர் அதிகம் தேவை இல்லை, 30 நாட்களில் மகசூல் போன்ற காரணங்களால் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பூக்களின் விலை மிக குறைவாக இருந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். தற்போது ஆயூதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட விசேஷ தினங்கள் வருவதால் பூக்களுக்கான தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது ஆயூத பூஜைக்காக பூக்கள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. பூக்களை பறித்து விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
பூக்கள் அதிகம் விற்பனை
இதுகுறித்து வெட்டன்விடுதியில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:- சாமந்தி, செண்டி, கோழி கொண்டை போன்ற பூக்கள் ஆயூத பூஜை போன்ற நாட்களிலேயே அதிகம் பயன்படுத்தபடுகிறது. முகூர்த்த தினங்களில் மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களே அதிகம் விற்பனை ஆகும். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரத்தை விட தற்போது சாமந்தி பூக்கள் கிலோவுக்கு ரூ.50 முதல் 80 வரை கூடுதலாக கிடைக்கிறது, என தெரிவித்தார்.