வீடுகளை உடைத்த பி.எம்.-2 காட்டு யானை
தேவர்சோலை அருகே பி.எம்.-2 காட்டு யானை வீடுகளை உடைத்தது. அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
தேவர்சோலை அருகே பி.எம்.-2 காட்டு யானை வீடுகளை உடைத்தது. அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பி.எம்.-2 காட்டு யானை
கூடலூர் தாலுகா தேவாலா, தேவர்சோலை பகுதியில் பி.எம்.-2 என வனத்துறையினரால் அழைக்கப்படும் காட்டு யானை அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் வீடுகளை இடித்து வருகிறது. கடந்த மாதம் 20-ந் தேதி தேவாலா வாழவயல் பகுதியில் வீட்டை இடித்த போது உள்ளே இருந்த பாப்பாத்தி என்ற பெண்ணை தாக்கி கொன்றது.
இதனால் காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் வனத்துறையினரால் யானையை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தேவர்சோலை பாடந்தொரை வனப்பகுதியில் பி.எம்.-2 காட்டு யானை முகாமிட்டு உள்ளது. ஆனால், மயக்க ஊசி செலுத்துவதற்கான வசதி இல்லாத இடத்தில் இருப்பதால் வனத்துறையினரால் காட்டு யானையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வீடுகளை உடைத்தது
இந்த நிலையில் பாடந்தொரை சுண்ட வயல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து விவசாயிகள் சுப்பிரமணி, பிரபாகரன் ஆகியோரது வீட்டை உடைத்தது. அப்போது வீட்டுக்குள் இருந்த அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் அலறினர். பின்னர் கிராம மக்கள் காட்டு யானையை விரட்டினர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விவசாய குடும்பத்தினரின் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். பின்னர் காட்டு யானை மீண்டும் அப்பகுதிக்கு வராமல் இருக்க பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இதனிடையே நேற்று காட்டு யானையை பிடிப்பது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து அப்பகுதியில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நீடில் ராக் வனப்பகுதியில் காட்டு யானை நிற்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் அதை பிடிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.