குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகள் படகில் ஆபத்தான பயணம்


குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகள் படகில் ஆபத்தான பயணம்
x

பாம்பன் குருசடை தீவிற்கு வனத்துறையினரின் பைபர் படகில் லைப் ஜாக்கெட் அணியாமல் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் குருசடை தீவிற்கு வனத்துறையினரின் பைபர் படகில் லைப் ஜாக்கெட் அணியாமல் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

21 தீவுகள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் அருகே உள்ள சிங்கலித் தீவு முதல் தூத்துக்குடி இடைப்பட்ட கடல் பகுதி வரையிலும் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள மன்னார் வளை குடா கடல் பகுதியில் கடல் ஆமை, டால்பின், கடல் பசு, பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இதன் இடையே பாம்பன் அருகே உள்ள குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகளும் சென்று பார்த்து ரசித்து வரும் வகையில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவிற்கு வனத்துறையின் மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட்டது.

கடல் சீற்றம்

இதில் படகில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல் பாம்பன் பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் குருசடை தீவிற்கு சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பாம்பன் பகுதியில் வீசி வந்த காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளதால் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவு வரையிலும் வனத்துறையின் மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. குருசடை தீவு வரை படகு போக்குவரத்து செய்ய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அதுபோல் குந்துகால் பகுதியில் இருந்து வனத்துறையினர் ஏற்றிச்சென்ற படகில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் லைப் ஜாக்கெட் அணியாமல் படகில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

கோரிக்கை

பாம்பன் பகுதியில் முழுமையாக காற்றின் வேகம் குறையாததால் கடல்சீற்றமாக காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில் சுற்றுலா படகில் கடலில் பயணம் செய்பவர்கள் லைப் ஜாக்கெட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகில் இருந்த வனத்துறையினரும் லைப் ஜாக்கெட் அணிவது குறித்து அறிவுறுத்தவில்லை.

பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவு வரையிலும் பைபர் படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பான முறையில் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இனியாவது வனத்துறையினர் கண்காணித்து செயல்பட வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்கள் அனைவரின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும்.


Next Story