விசைப்படகு மீனவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்தன


விசைப்படகு மீனவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்தன
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் குறைவான மீன்களே சிக்கியிருந்தன. இதனால், மீனவா்கள் கவலை அடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் குறைவான மீன்களே சிக்கியிருந்தன. இதனால், மீனவா்கள் கவலை அடைந்தனர்.

சூறைக்காற்று

குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம் ஆகியவற்றில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகுகள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். வள்ளங்கள் காலையில் கரையையொட்டிய கடல் பகுதிகளில் மீன்பிடித்து விட்டு மதியம் கரைக்கு திரும்புகின்றன.

கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வந்தது. இதனால் விசைப்படகு, வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குறைவான மீன்களே...

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் வீசி வந்த சூறைக்காற்று சற்று தணிந்து காணப்பட்டது. இதையடுத்து விசைப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை முதல் மீன்பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற வள்ளம் மீனவர்கள் மதியமே கரைக்கு திரும்பினர். அவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்து இருந்தன.

ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் 5 படகுகள் நேற்று காலையில் கரைக்கு திரும்பின. அந்த விசைப்படகுகளில் கணவாய், சூரை, புல்லன் ஆகிய மீன்கள் குறைவாகவே கிடைத்திருந்தன.

மீனவர்கள் கவலை

இந்த மீன்களை துறைமுக ஏலக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏலமிடப்பட்டது. அதன்படி ஒரு கிலோ கணவாய் (சி.எப்) ரூ.480-க்கும், புல்லன் வகை இறால் மீன் கிலோ ரூ.40-க்கும், சூரை மீன் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது.

காற்று தணிந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு, வள்ளங்களில் குறைவான மீன்களே கிடைத்ததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.


Next Story