தூத்துக்குடியில் படகு போட்டி: மீனவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்


தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உலகமீனவர் தினத்தை முன்னிட்டு நடந்த படகு போட்டியில் மீனவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் படகு போட்டி நடந்தது. இதில் மீனவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

படகு போட்டி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் உலக மீன்வளம் மற்றும் மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று படகு போட்டி நடத்தப்பட்டது.

முத்துநகர் கடற்கரையில் நடந்த படகு போட்டிக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீறிப்பாய்ந்தது

இதில் தூத்துக்குடியை சேர்ந்த 15 பைபர் படகுகளில் மீனவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியானது 7 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்டது. போட்டி தொடங்கிய உடன் படகுகள் கடலில் சீறிப்பாய்ந்து சென்றது. குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் படகுகள் மீண்டும் திரும்பி வந்தன.

இதில் திரேஸ்புரத்தை சேர்ந்த ராஜ் முதல் இடத்தையும், ராஜேஷ் 2-வது இடத்தையும், லிட்டில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மீனவர்களுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மீனவர்களுக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story