சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது.
கோடை விழா
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் கடந்த 26-ந்தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதையொட்டி சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஏரியில் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
படகு போட்டி
ஆண்கள் இரட்டையர் பெடல் படகு, கலப்பு இரட்டையர் பெடல் படகு என 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற படகு போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சர்வேஸ்வரன், சுரேஷ் ஆகியோர் முதல் இடத்தையும், தென்காசியை சேர்ந்த காளிதாஸ், வெங்கட்ராமன் ஆகியோர் 2-ம் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த சேர்மன், தினேஷ்குமார் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரையை சேர்ந்த சதீஷ்குமார், முத்துலட்சுமி முதல் இடத்தையும், காரைக்குடியை சேர்ந்த தினேஷ், கீத்பிரியா 2-ம் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன், முத்துபிருந்தா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
பரிசுகள்
பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கொடைக்கானல் சுற்றுலாத்துறை அலுவலர் (பொறுப்பு) சுதா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, படகு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
முன்னதாக இந்த போட்டிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், போட்டியாளர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.