2 பைபர் படகுகள் நடுக்கடலில் மூழ்கின


2 பைபர் படகுகள் நடுக்கடலில் மூழ்கின
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், நடுக்கடலில் 2 பைபர் படகுகள் மூழ்கிய விபத்தில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

நாகையில், நடுக்கடலில் 2 பைபர் படகுகள் மூழ்கிய விபத்தில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

கடலில் மூழ்கிய பைபர் படகு

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கீச்சாங்குப்பத்தை சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(63), ஆறுமுகம்(60), சந்தோஷ்(32), மைக்கேல்(32) ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் நேற்று காலை நாகையில் இருந்து 10 நாட்டிக்கல் தொலைவில் கடலில் வலை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் அவர்கள் படகின் உள்ளே கடல் நீர் புகுந்ததால் பாரம் தாங்காமல் படகு திடீரென கடலில் மூழ்கியது.

4 மீனவர்கள் காயம்

இதில் 4 மீனவர்களும் டீசல் கேனை பிடித்து கொண்டு, 2 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக மீன்பிடிப்பதற்காக மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தனர்.

இதில் காயம் அடைந்த கண்ணன், ஆறுமுகம், சந்தோஷ், மைக்கேல், ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு விபத்து

இதை போல நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினம்(45) என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது தந்தை குஞ்சாலு(61), சகோதரர் சிவக்குமார்(46) ஆகியோருடன் நேற்று காலை 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

பிடித்த மீன்களை படகில் ஏற்றும்போது பலத்த காற்று காரணமாக திடீரென எழுந்த ராட்சச அலையில் படகு ஒரு பக்கம் சாய்ந்து கடலில் மூழ்கியது. இதில் 3 பேரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினர். அப்போது அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு நாகை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

படகுகளை மீட்கும் பணி தீவிரம்

நாகை பகுதியில் நடுக்கடலில் மூழ்கியுள்ள 2 பைபர் படகுகளை மீட்க கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 2 பைபர் படகு மற்றும் ஒரு விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

2 படகுகள் மூழ்கிய விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் முற்றிலும் கடலில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆறுதல்

காயம் அடைந்து நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை, மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், நகரசபை தலைவர் மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story