குண்டாறு அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குண்டாறு அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்
செங்கோட்டை:
குண்டாறு அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
படகு போக்குவரத்து
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இயற்கை அழகை ரசித்தனர்
குற்றாலம் அருவிகளில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள், குண்டாறு அணைக்கும் சென்று படகில் உற்சாகமாக பயணித்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர். படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அணையில் ஒரு படகு இயக்கப்படும் நிலையில் விரைவில் கூடுதலாக ஒரு படகும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அணை பகுதியில் உள்ள தனியார் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உடைமாற்றும் அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.