படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்


படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. கடந்த 2 நாட்களாக காலையில் கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், படகு போக்குவரத்து 2 நாட்களாக தாமதமாக தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று காலையிலும் திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பின்னர், 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர். தொடர்ந்து 3-வது நாளாக நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமானது குறிப்பிடத்தக்கது.


Next Story