குற்றாலத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது; சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்
2 ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுகளில் பயணித்து மகிழ்ந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுகளில் பயணித்து மகிழ்ந்தனர்.
அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
'தென்னகத்தின் ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளுகுளு சீசன் நிலவும். குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பொழியும். அவ்வப்போது இதமான வெயில் அடிக்கும். அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்காகவும், அருவிகளில் குளித்து மகிழ்வதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கியபோதிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
உற்சாகமாக குளித்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் நேற்று சீசன் மிகவும் நன்றாக இருந்தது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அவ்வப்போது இதமான வெயில் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
வார விடுமுறை நாட்களையொட்டி குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடனும் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
படகு சவாரி தொடங்கியது
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணமடை குளத்தில் படகு குழாம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் படகு சவாரி தொடங்கியது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் படகு சவாரியை தொடங்கி வைத்து, படகில் சிறிது தூரம் பயணித்தனர். சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், படகு குழாம் மேலாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்டணம்
படகு சவாரி தொடங்கியதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான படகுகளில் ஆனந்தமாக சவாரி செய்தனர். பெடல் படகுகள், துடுப்பு படகுகள், தனிநபர் செல்லும் கயாக் படகு என மொத்தம் 32 படகுகள் உள்ளன. இவற்றில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன.
படகு சவாரி அரை மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருநபர் பெடல் படகு ரூ.150, 4 நபர் பெடல் படகு ரூ.200, 4 நபர் துடுப்பு படகு (20 நிமிடம்) ரூ.250, தனி நபர் கயாக் படகு ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து படகுகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.