பகலிலும் உலா வரும் காட்டுப்பன்றிகள்


பகலிலும் உலா வரும் காட்டுப்பன்றிகள்
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் பகல் நேரங்களிலும் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மகசூல் இழப்பு

மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இதனால் காய்கறிப் பயிர்களில் பயிர் சேதம், பூச்சி, நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய விலையின்மை, பல மடங்கு உயர்ந்த உற்பத்திச் செலவு போன்றவற்றால் தவித்து வரும் விவசாயிகளுக்கு மழை பாதிப்புடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்பும் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காடுகளில் வசிக்க வேண்டிய காட்டுப் பன்றிகள் காடுகளை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்து, கிட்டத்தட்ட நாட்டுப் பன்றிகளாகவே மாறி விட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் காட்டுப் பன்றிகள் தற்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் ஊருக்குள் ஊடுருவி விட்டன.பகல் நேரங்களில் புதர்களுக்குள் மறைந்து ஓய்வெடுக்கும் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குள் படையெடுத்து பயிர்களைத் தின்றும், கிளறியும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன.

சுட்டு பகலிலும் உலா வரும் காட்டுப்பன்றிகள்கொல்ல வேண்டும்

தற்போது மடத்துக்குளம், வேடப்பட்டி, கணியூர் உள்ளிட்ட மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் பொழுதிலும் சில பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தென்படுகின்றன. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. மேலும் கால்நடைகளையும் காட்டுப்பன்றிகள் தாக்கி காயப்படுத்தும் நிலை உள்ளது.

ஊருக்குள் உள்ள காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் என்று கருதாமல் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒருசில விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றி சேலைகளைக் கட்டி வைத்து காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். அதையும் தாண்டி காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை. அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிர்களை சேதப்படுத்தும் போது இழப்பீடு பெற முடியாத நிலையே உள்ளது.

மேலும் விவசாயிகள் நாய்களைப் பயன்படுத்தியோ, பட்டாசு உள்ளிட்டவற்றை வீசியோ, காட்டுப் பன்றிகளை விரட்டும் போது எதிர்பாராத விதமாக அவை உயிரிழக்க நேரிட்டால் விவசாயிகள் குற்றவாளிகளாகும் நிலை உள்ளது.

தற்போது காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன் படிப்படியாக வெவ்வேறு பகுதிகள் நோக்கி ஊடுருவி வருகின்றன.இதே நிலை நீடித்தால் விவசாயத்தின் மிகப் பெரிய சவாலாக காட்டுப் பன்றிகள் உருவெடுக்கும் நிலை உள்ளது.எனவே உடனடியாக முடிவெடுத்து, வனத்தை விட்டு வெளியேறிய காட்டுப் பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story